எச்சரிக்கை! A9 வீதி புளியங்குளத்தில் மின்னல் தாக்குதல் : வீதியில் மின்சார கம்பிகள்!

884

புளியங்குளம் ஏ9 வீதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக காணப்படும் மின்சார கடத்தியில் தூண் இன்று (12.10) சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை காரணமாக புளியங்குளம் ஏ9 வீதி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள அதி உயர் மின்சார கடத்தியின் கம்பி மீது மின்னல் தாக்கியதில் தூண் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக வீதியில் அருகே மின்சார கம்பி நிலத்தில் காணப்படுவதனாலும் தற்போது மழை பெய்து வருகின்றமையாலும் பொதுமக்களுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.

சம்பவ இடத்திற்கு தற்போது புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி விரைந்து பாதுகாப்பு பணியில் பொலிஸாரை ஈடுபடுத்தியுள்ளதுடன் இலங்கை மின்சார சபைக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

பல மணிநேரமாக இலங்கை மின்சார சபைக்கு தகவல் வழங்கியுள்ள போதிலும் இது வரை மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லையெனவும் மின்சாரம் தாக்கி மக்கள் பலியானால் யார் பொறுப்பு ? என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

தற்போது அப்பகுதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.