தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைப்போம்: பஷில் ராஜபக்ஷ!

129

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான கட்சிகளை தமது அணியுடன் ஒன்றிணைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவாக, பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிழக்கில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்-

”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தே எம்முடன் அதிகளவானோர் இணைந்துகொண்டனர். அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடாதவர்களும் எம்முடன் இணைந்துகொண்டுள்ளனர். இந்த பலத்துடன் பாரிய வெற்றிபெறுவோம்.

மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் நாம் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் பற்றி தற்போது விமர்சிக்கப்பட்டாலும், அதே சட்டமூலத்தையே தற்போதும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. அதிலும் பல குறைபாடுகள் உள்ளன.

ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்று கூறுவதைப் போல் அல்லாமல், நாம் எந்த இசைக்கும் ஆடத் தயாராக இருக்கின்றோம். துடுப்பாட்ட மட்டைக்கு பதிலாக தேங்காய் துண்டு ஒன்றை கொடுத்து விளையாட சொன்னால் விளையாடுவோம். அத்தோடு, மூன்று ஸ்டம்புகளில் இரண்டு ஸ்டம்புகளை பிடுங்கிக் கொண்டு ஒரு ஸ்டம்பை மாத்திரம் வைத்து பந்து வீச சொன்னால், அப்போதும் பந்துவீசி விக்கட்டை வீழ்த்துவோம். எந்த தேர்தல் முறையில் தேர்தலை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயார் என்பதையே இதன் மூலம் நான் கூறுகின்றேன். அதனால்தான் இச் சட்டமூலத்திலுள்ள குறைபாடுகளை நாம் கூறாமல் இருக்கின்றோம்.

மேலும், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாடு இரண்டாக பிளவுபடுவது மாத்திரம் அன்றி, தேசிய சமாதானமும் சீர்குலையும். குறிப்பாக தற்போது நாட்டில் நிலவும் சகவாழ்வு இதனூடாக பாதிப்படைய வாய்ப்புள்ளது, அத்துடன் பொருளாதாரமும் பாதிப்படையும் சந்தர்ப்பமும் உள்ளது. ஆகையால் சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் தேர்தலில் உள்ளுாராட்சி மன்றங்களில் 200இற்கும் அதிகமான ஆசனங்களை கைப்பற்றுவோம்” என்றார்.