தீர்வின்றி 226 ஆவது நாளாக தொடர்கிறது கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம்!

46

கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன்(12) 226 ஆவது நாளை எட்டியுள்ளது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தொடர் போராட்டத்தை கேப்பாபுலவு மக்கள் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

 

கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டு மாதங்களை கடந்துள்ளபோதும் தீர்வொன்று முன்வைக்கப்படாமை தமக்கு வேதனையளிப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது அடைமழை பொழிந்துவரும் நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறுவர்களை ,குழந்தைகளை வீதியில் வைத்துகொண்டு பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் போராடிவருவதாகவும் கவலை தெரிவித்தனர்.

எனினும் தமது காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இவ்வாறான நிலையில் தமது போராட்டத்திற்கு தாயகப் பகுதிகளிலுள்ளவர்கள் மாத்திரமன்றி, புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.