சிங்கள நண்பா!
உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!
ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!
உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!
உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!
முடியவில்லை என்னால்;
காரணம் இதே போல ஒரு மாதத்தில்த்தான்
அவற்றை நீ வெட்டிவிட்டாயே!
நீ மறந்திருப்பாய்.
என்னால் மறக்கமுடியவில்லை.
காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!
நினைவிருக்கிறதா உனக்கு..
நீ மறந்திருப்பாய்.
நீ கொலைவெறியோடு விரட்டும் போது;
ஒரு கையில் குழந்தையும்
இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம்.
நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்
உனக்காய் அழமாட்டமா?
ஆனால்;
மன்னித்துவிடு சகோதரா…
இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!
நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய்
நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!
நாளை இந்த வெள்ளம் வற்றி நீ நலம் பெறுவாய்!
உனக்காய் உலகமே வரும்!
குற்றுயிராய் நந்திக்கடலில் மூழ்கியபோது;
எனக்காய் யாரும் வரவும் இல்லை
இனியும் வரவும் மாட்டார்கள்.
இனி வரவும் தேவையில்லை!

 

சிங்கள சகோதரா!

உனக்காக நான் அழுவதற்கு தயார்

ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை.
கொத்துக்கொத்தாய்..
பூவும் பிஞ்சுமாய்…
குஞ்சு குருமனாய்…
குடல் கிழிந்து…
சதை கிழிந்து…
வயிறொட்டி…
உயிரற்ற பிண்டங்களையாய்…
உணர்வற்ற பூச்சிகளாய்…
இதே ஒரு மாதத்தில்தான் ….
வானம் அதிர குழறினோம்!!
உண்மையை சொல்லு
உனக்கு கேட்டதா? இல்லையா??
எனக்காய் நீ ஒரு கரம் கூட நீட்டவில்லையே!
எனக்காய் ஒரு துளி கண்ணீர் கூட விடவில்லையே!
எனக்காய் ஒரு குரல் கூட தெற்கில் கேட்கவேயில்லையே!!!
உனக்கும் எனக்குமா போர் நடந்தது?
இல்லையே!!!
எதற்காக மெளனமாக இருந்தாய்?
ஏன் திரும்பி நடந்தாய்?
போர்
உங்கள் முன்னால்…
எங்களை;
கடித்துக்குதறி…
கைகளை பின்னே கட்டி..
கறுப்புத்துணியால் கண்களை மூடி..
முதுகில் உதைத்து
பிடரியில் அடித்து…
சப்பித்துப்பி…
தின்று…
கைகழுவிப்போனபோது…
அம்பாந்தோட்டையிலும்…
அழுத்கமவிலும்…
நீங்கள் வெடி கொழுத்தி கொண்டாடிக்கொண்டிருந்தீர்கள்.
பின்னர் ஒரு நாளில்
முட்கம்பி வேலிக்குள்…
நாங்கள் வானம் அதிர..
தொண்டை கிழிய…
குழறிக்கொண்டிருந்தோம்.
நீங்கள் கொழுத்தி கொண்டாடிய “சீனா வெடிகளில்” …
எங்களின் கூக்குரல்…
உங்களுக்கு கேக்கவேயில்லை!
இன்று
உனக்காக நான் அழுவதற்கு எனக்கு விருப்பம்.
ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை!
போன கிழமைதான்..
நந்திக்கடலோரம்…
நான் என் அண்ணாவுக்காய் அழுதுகொண்டிருந்தேன்.
முள்ளிவாய்க்காலில் தொலைத்த
தன் மகனை …
தாயொருத்தி தேடிக்கொண்டிருந்தாள்!
நீயோ!
கிளிநொச்சியின் வீதிகளில்
“சிங்கலே” கொடி கட்டுவதிலும்…
யாழில் விகாரைக்கு அடிக்கல் நாட்டுவதிலும் மும்முரமாக இருந்தாய்.
கொழும்பு வீதிகளில்…
வெடி கொழுத்துவதிலும்;
வெற்றிக்கொண்டாட்டங்களில்
“கிரிபத்” தின்பதிலும்…
ஆரவாரமாய் இருந்தாய்!
நீ மறந்திருப்பாய்.
ஆனால் நான் மறக்கவில்லை.
மறக்கவும் முடியாது!

மறக்கவும் கூடாது!

உனக்காய் நான் அழவும்..
உனக்காய் என் கரம் நீழவும்..
உனக்காய் நான் ஓடிவரவும்…
என்னால் முடியாது.
ஏனெனில்;
என் கால்களை…
என் கைகளை இதே போல ஒரு மாதத்தில்தான் நீ வெட்டி எறிந்தாய்.
நீ மறந்திருப்பாய்..
ஆனால் நான் மறக்கவில்லை!
ஏனெலில் என்னால் நடக்கமுடியவில்லை!
சிங்கள நண்பா!
உனக்காய் நான் அழ விருப்பம்தான்..
என்னிடம் கண்ணீர் இல்லையே!
ஆனால்;
உன் துன்பத்தில் நானும் துணையாக வர
இனியாவது உன் கரங்களை நீட்டு…
காத்திருக்கிறேன்..
வாற வருடம்
முள்ளிவாய்க்காலில்
என்னோடு “தீப்பந்தம்”
ஏத்தவருவாய் என
நம்பி…
ஆரியகுளத்து புத்தனிடம்
உனக்காய் வேண்டுகிறேன்.
என்னைக்காப்பாற்றாத போதிமரத்தான் உன்னைக்காப்பாற்றக்கூடும்!!

 

அன்புடன்
#தமிழ்ப்பொடியன்
27/05/2017

 

0 Shares