இன்று உன் உடல் வருகின்றதாம்!
அனேகமாய் உன் இறப்புச்செய்தி அறிந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. கொஞ்சநாட்கள் உலுக்கியது நண்பனின் பிரிவு. இப்போது சற்று சகஜமாகி விட்டோம்.
இயந்திர வாழ்க்கை. இருந்தாலும் இந்த நாட்களில் மூளையின் ஒரு ஓரத்தில் அடிக்கடி உன் பெயரும், நினைவுகளும் தள்ளாடிவிட்டு போகும். அந்த நேரங்களில் அஸ்தமித்து போயிருப்போம். இறப்புக்கு பின் நாம் உடனே மறந்து சகஜமாகி அடுத்த சோலியை பார்ப்பதற்கு நீ உறவுக்காரனாய் இருந்து விட்டு போகவில்லை. நண்பனாய் இருந்திருக்கின்றாய். சுற்றித்திரியும் நகரெத்தெருக்களில், மைதானத்தில், பாலைப்பழ காடுகளில்.. இப்படி எல்லா இடங்களிலும் நீ இருக்கின்றாய் கபுடா.

எப்படி தொடங்கினாலும்! இறுதிக்கொடியாய் “வெளிநாடு” என்ற மாயையில் முடியும்படியாக பெரும்பாலனோர்களின் வாழ்க்கையை டிசைன் செய்து வைத்துள்ளது அவர்களின் சூழல். அதொரு மாய வலை. அதுதான் எப்போதும் வெல்லும். பழக்கங்கள் என்றால் மாற்றி விடலாம், இங்கு இது பாரம்பரியம். ஏஜென்சிகள் சாமியார்கள்.

நம்மாட்களின் தேசியப்பழக்கம். தம்மைச்சுற்றி வலைகள் பின்னப்படுகின்றது என தெரிந்தும் சிரித்துக்கொண்டே சிக்குவார்கள். அந்த வலைகள் பின்னி முடிந்து அதற்குள் முழுமையாக சிக்கிய பின் தான் கோஷம் போட்டு போராட்டம் செய்வார்கள். ஈழத்தின் தனித்துவம்.

வெளிநாடு எனச்சென்று காணமல்ப்போனவர்களையும் , இறந்தவர்களையும் விட , வெளிநாடு சென்று ஊர்க்குள் நல்லபடியாய் செட்டிலானவர்களே பெரும்பான்மை.
ஆக, அதுவே வெல்லும்.
சரி விடுங்கள். நானே நாளை துருக்கியூடாய் எதாவது நாடு செல்ல எத்தனிக்கலாம். சில விஷயங்கள் உணர்வுபூர்வமாய் நம்மை தனதாக்கி கொள்ளும்.

பிள்ளைகளை முள்ளிவாய்க்காலில் இருந்து காப்பாற்றிக்கொண்டு வந்து கடல் வழியே அவுஸ்ரேலியாக்கு என பலி கொடுத்த ஆட்கள் உள்ள தேசம் இது.
இங்கு ஏஜேன்சிகள் சாமியார்கள்.

10 வயதுச்சிறுவன் முன்னால் .. “இவனுக்கென்ன.. படிக்காட்டியும் பரவால்ல வெளிநாட்டுல மாமா இருக்கார் அவனொரு அஞ்சு வருஷத்தில போயிடுவான்” என்பார்கள். அதன் பின் அவன் அதைச்சுற்றித்தான் நிற்பான். அவனின் அடுத்த கட்ட திட்டங்கள் எல்லாம் வெளிநாடு என்பதில் போய் முட்டி நிற்கும். அவனுக்கு எதிர்காலம் தொடர்பில் எந்த பயமும் வருவதில்லை. எதிர்காலத்தை பற்றி பயங்கொள்ளாதவன் எவ்வழியிலும் உள்ளூரில் தொழில்வாய்ப்பு தேடி உழைக்க மாட்டான். இப்படி அவர்களை மாற்றிவிட்டு ” அவன் ஊதாரியாய் திரிஞ்சான் அதான் புடிச்சு அனுப்பிட்டம்” என்று அவன்மேலயே பழிபோடும் குடும்பங்களை கொண்ட தேசமிது.

வெளிநாடு சென்றும் கஷ்டப்பட்டுத்தான் உழைக்கின்றார்கள். அதில் நான் எந்த குறையும் கூறுவதாயில்லை. எனக்குத்தெரிந்த ஒருவர் குளிர்காலங்களில் நகம் வெடித்து ரத்தம் வரும் போட்டோ ஒன்று அனுப்பினார். உண்மையில் அது ரணம்.
ஆனால் இவ்வளவு நெகட்டிவ் பாய்ண்ட்களையும் தூக்கி சாப்பிடும் அந்த வெளிநாட்டு போதையைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

சீக்கிரம் உழைச்சு செட்டிலாகிடலாம், ரிச் லைப். இதுதான் போல.

சொந்த ஊரில் இல்லாமல் இளமையைத்தொலைத்த வாழ்வு சவப்பெட்டிக்குள் கிடப்பதற்கு சமம்.
இதற்குப்பின் என்ன உழைப்பு?  ரிச் லைப் எல்லாம்.

கபுடா! நீ குற்றவாளி அல்ல. கைதி. உன் சாவு உன் குற்றம் அல்ல. அந்தக்குற்றவாளிகள் உன்னைச்சுற்றி இருந்திருப்பார்கள். இப்போதும் உன் சாவுக்காக அழுது கொண்டிருப்பார்கள். இது இங்கு குற்றமாய் கொள்ளப்படுமா! உணரப்படுமா என்பதுதான் இங்கு பிரச்சினையே.
ஆம் வெளிநாடு என்பது இங்கு பாரம்பரியம்.

உன் சாவைப்பார்த்து “வெளிநாடெல்லாம் நினைச்சுப்பார்க்க கூடாதுடா” என அந்த நேரத்தில் நினைப்போம். ஆனால் அடுத்த மணித்தியாலங்களில் உன் உடலுடன் சேர்த்து அந்த எண்ணத்தையும் புதைத்து விடுவோம். அதுதான் நாம்.

உன் சாவை நாம் கொண்டாடுவோம். நண்பனின் சாவு. நீ கொண்டாட்டமாய்த்தான் எங்களுடன் வாழ்ந்தாய். உன் இறப்பில் மட்டும் விம்மிக்கொண்டிருக்க மாட்டோம்.

வா நண்பா.

“கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு ..
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண்மூடி கொண்டால் ………..”

– Vinishanth Raveendran

 

511 Shares