ஓர் ஆளுமை சமூகத்தில் நிகழ்த்தியிருக்கும் மாற்றத்தையே அவரை அளவிடுவதற்கான அளவுகோலாகக் கொள்ளமுடியும். மதிப்பீடுகளற்றுப் போன ஒரு சமூகமாக மாறியிருக்கும் நாம் எல்லாவற்றையும் வாய் பார்த்துவிட்டு நகர்ந்துகொண்டிருக்கிறோம். அரசியல்வாதியாக ஒருவர் வருவதற்கு முன் ஒரு வாழ்க்கையிருக்கிறது. அந்த வாழ்க்கையில் அவர் என்னவாக இருந்தார், எப்படி நடந்து கொண்டார், எவற்றை உருவாக்கினார் என்பது பிற்கால அவரது அரசியல் பயணத்தில் செல்வாக்குச் செலுத்தும். இந்தப் பத்தியை அமைச்சர் ஐங்கரநேசனின் ஆளுமை தொடர்பிலும் அவர் தொடர்பான விமர்சனங்களை நாம் எவ்வாறு உரையாடப்போகிறோம் என்பது தொடர்பிலும் ஒரு முன்வரைவை உருவாக்கிக் கொள்ளவும் தொகுக்கிறேன்.

ஐங்கரநேசன் மேல் ஊழல் வழக்குகளோடு சேர்த்து அதிகார துஷ்பிரயோகம் என்பது வரை நிறைய குற்றங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதலமைச்சாரால் ஒழுங்குபடுத்தப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் படி அவர் குற்றவாளியாகவே குறிப்பிடப்படுகின்றார். தற்போது வடக்குமாகாணசபை பெரும் அல்லோல கல்லோலப்பட்டுப்போயிருக்கிறது. முதலைச்சர் பதவியிலிருந்து விக்கினேஸ்வரனை நீக்கப்படக்கூடிய அளவுக்கு விஷயம் வீங்கி வெடித்திருக்கிறது. இது ஒருவகையில் விக்கினேஸ்வரனுக்கான கண்ணி தான். அதற்கு அவருக்கு நெருக்கமான ஐங்கரநேசனைக் குறிவைப்பது ஒரு விதத் தந்திரம். அதைத் தான் கழுதைப்புலிகள் செய்துகொண்டிருக்கின்றன.

முதலில் ஐங்கரநேசன் பற்றிய ஒரு சுருக்கமான பின்னணியைப் பார்ப்போம். சூழலியல் மாணவனாக, ஆசிரியராக, இதழியலாளராக, செயற்பாட்டாளராக ஐங்கரநேசன் இந்த சமூகத்தின் ஒரு ஆளுமை பொருந்திய சக்தி. அவர் சார்ந்திருந்த ‘தேனீக்கள்’ என்ற அமைப்பு யுத்த காலங்களில் ஏராளம் உதவிகளை மக்களுக்குச் செய்திருக்கிறது. ‘நங்கூரம்’ என்ற இதழ் ஆயிரக்கணக்கான மாணவர் மத்தியில் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கை, மரநடுகைக்கென்றொரு மாதத்தை அறிவித்து அது தொடர்பிலான தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்தமை, விவாசாயிகளையும் வீட்டுத் தோட்டம் செய்பவர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு பாராட்டு விழாக்களையும் கௌரவத்தினையும் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொடுத்தமை, ‘அம்மாச்சி’ என்ற உணவகத்தினை நிறுவி அதன் மூலம் உள்ளூர் உணவுகளையும் பெண்களுக்கான சுயநம்பிக்கையையும் உருவாக்கியமை, இதன் ஊடாக ஏராளமானவர்கள் இன்றும் நல்ல சாப்பாடு சாப்பிடக் காரணமாயிருப்பமை, மரபுரிமைகள் சார்ந்தும் சூழலியல் சார்ந்தும் பொருட்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை, தொண்டைமானாறு நீரேரியை நன்னீர் நீர்த்தேக்கமாக்கும் முயற்சி, வருடந்தோறும் பனைவளக் கண்காட்சியும் பனை வளம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்கள், நல்லூர் திருவிழாக் காலங்களில் விவாசாயக் கண்காட்சி, அதனுடன் தொடர்புடைய மலிவு விலையில் நூல் விற்பனை, புதிய விவசாய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருத்தல், உள்ளூர் உணவுகளுக்கான கண்காட்சிகளை நடத்த ஆரம்பித்திருப்பமை, “ஏழாவது ஊழி” என்ற சூழலியல் சார்ந்த கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளமை என்று அவர் நேரடியாக தேர்தல் அரசியலில் ஈடுபட்ட பின்னரும் அதற்கு முன்னரும் ஏராளமான பொது வேலைகளை முன்னின்று நடத்திய ஆளுமை.

சமகாலத்தைய ஈழத் தமிழ் அரசியலில் இவ்வளவு பன்முகத்தன்மை வாய்ந்த, அடிமட்டத்திலிருந்து செயற்பாடுகளினூடாக வளர்ச்சி பெற்று வந்த வேறெந்த அரசியல் தலைமையும் இல்லை.

இன்றளவும் எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அவரை சந்தித்து உரையாடமுடியும். இவரளவுக்கு நெருக்கமாக மக்களுடன் உரையாடும் தலைமைகள் குறைவு, மேலும் இவரளவுக்கு தற்போது உலகம் எதிர்கொண்டுகொண்டிருக்கும் மிகக் கடுமையான சூழலியல் சார் பிரச்சினைகள் தொடர்பாக ஆழமான அறிவையும் அதற்கான தெளிவான பார்வையையும் கொண்ட இன்னொரு தலைமை அரசியல் அரங்கில் இல்லை.

சூழலியலையும் தேசியத்தையும் ஒருங்கே பேசக்கூடிய ஓர் அரசியல் தலைமை தமிழ் மக்களுக்குத் தேவை. அரசியல்வாதிகளின் வகிபாகம் என்பது வெறுமே ஆயிரம் பிரச்சனைகளைக் கதைகளாகக் கதைத்துக்கொண்டிருப்பதில்லை. மேலே நாம் அடையாளம் கண்ட பண்புகளைக் கொண்ட ஒரு தலைமையால் தான் கனவுகளை காண முடியும்.

தனது காலத்திற்கு தேவையென்று தான் கருதும் விடயங்களை துணிவாகவும் திடமாகவும் நடைமுறைப்படுத்த முடியும். உதாரணத்திற்கு எந்தக் கடையிலுமே சாப்பிட முடியாமல் விழுங்கித் தொலைக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கான உணவுத் தேவைகளை சூழலியல் சார்ந்த அக்கறையுடனும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான கனவுடனும் தீர்வுசெய்யும் நோக்கத்தின் விளைவுதான் ‘அம்மாச்சி’.

அம்மாச்சி போன்ற பயன்மதிப்பும் பல்வேறு பரிணாமங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான வேறொரு நடவடிக்கைகளையும் வேறெந்த சமகால அரசியல் தலைமைகளும் முன்வைக்கவில்லை. சமூகத்திற்கான தனது கனவையும் நடைமுறையையும் இணைத்து யார் ஒருவர் புதிதாக ஒன்றை சமூகத்தில் உருவாக்குகிறாரோ அது மிக முக்கியமான ஒரு நகர்வு; அதனைச் செய்பவரே சமூகத்திற்கான தலைமை.

மற்றவர்களெல்லாம் அவர்களுக்கானதை கதைத்துக்கொண்டிருக்கும் போது நிலைத்து நின்று சமூக மாற்றத்தை உருவாக்கும் வகைமாதிரியை அவர் சமூகத்தில் உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கார்த்திகை மாதமும் ‘மரநடுகை ‘ மாதமாக அறிவித்து அதை நடைமுறைப்பபடுத்துவதென்பது இனிவரப்போகும் அரசியல்வாதிகளுக்கும் தலைமுறைகளுக்கும் ஒரு செய்தி.

ஐங்கரநேசனின் நிர்வாகத் திறன் என்பதை முன்வைத்து இந்தப் பிரச்சினையின் இன்னொரு பரிமாணத்தைப் பார்த்தால், நிர்வாக ரீதியில் ஐங்கரநேசனின் பலவீனங்கள் சமூகத்தை பாதிக்குமொன்றாக மாறிவிடக் கூடும். அதேவேளை அவை நிவர்த்தி செய்யப்பட முடியாதவையல்ல. பொதுவாழ்வில் யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எனக்கும் கூட அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

ஆனால் இவ்வளவு பணிகளையும், இதை விட அதிகமானவற்றையும் செய்திருக்கும் ஐங்கரநேசன் தொடர்பில் நாம் ஒரு விவாதத்தை உருவாக்கும்போதும் விமர்சனத்தை வைக்கும்போதும் எளிமையான தர்க்க விளையாட்டுகளின் மூலம் மதிப்பிட முடியாது. அவரது மொத்தவாழ்வில் அவர் செய்தவற்றினையும் சேர்த்தே அவர் பற்றிய மதிப்பீடு அமையவேண்டும். அறமும் ஒரு அளவுகோல்தான்.

இங்கு ஐங்கரநேசனையோ அல்லது விக்கினேஸ்வரனையோ குறிவைக்கும் தரப்புக்களின் அரசியல் வெளிப்படையானது. இந்த நாடகத்தினை நாம் வெறுமனே வாய் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. அப்படி நாம் இருப்போமென்றால், சமூகத்திற்காக உழைத்து அதற்காக தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்து அதன் மூலமாக அரசியலில் உருவாகி வரும் ஆளுமைகளை நாம் முழுவதும் சோர்வடையச் செய்துவிடுவோம். அது சுயநலம் வாய்ந்த அரசியல் கும்பல்களை கொண்டாட வைக்குமொரு செய்தி.

நாம் அப்படியிருக்கக்கூடாது. அரசியலில் மதிப்பீடுகளுடன் நாம் முடிவுகளை எடுக்க வேண்டும். இவரை விமர்சிப்பவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதற்காக அரசியலை செய்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஐங்கரநேசன் போன்றவர்கள் எப்பொழுதும் ஆபத்தானவர்களே.

அவர்கள் கழுதைப்புலிகள்; புலிகள் அல்ல. கழுதைப்புலிகளை நாம் கழுதைப்புலிகள் என்று தான் அழைக்க முடியும். சோம்பேறிகளின் அரசியல் என்பது கழுதைப்புலி அரசியல் தான். அதனை நாம் ஆதரிக்க முடியாது. அதனை நாம் உரக்க வெளிப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு குறித்த விசாரணைக்குழு “பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவர் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களில் தலையிடுவதை விசாரணைக்குழு சட்டபூர்வமற்றதென நிறுவ முயன்றுள்ளது” என்பதன் உள்நோக்கத்தைப் பார்க்கவேண்டும்.

ஒருவர் எல்லையை மீறி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது தான் அறத்தின் அடிப்படையில் குற்றமே தவிர, நன்மை செய்வது அல்ல. இது போன்ற அடிப்படை அறமற்ற கும்பல்களுக்கு மத்தியில் மக்கள் தாம் நம்பும் அறத்தை மதிப்பீடுகளுடன் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்த மதிப்பீடுகளுக்காக போராடவேண்டும்.

நாளைய தலைமுறைக்கு நாம் அரசியல்வாதி எவ்வாறு இருக்கவேண்டுமென்று சொல்வதற்கும் குறைந்தபட்சம் எது போன்ற வேலைகள் இந்த சமூகத்திற்கும் உலகத்திற்கும் முக்கியமானதென்று சொல்வதற்கும் ஒரு அமைச்சராவது இருக்கவேண்டாமா?

(இதன் தொடர்ச்சி நாளை தொடரும்)

– கிரிஷாந்

412 Shares