முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கான ஆதரவுக் குரல்கள் எழுச்சிபெற ஆரம்பித்திருக்கும் பின்னணியில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. வடக்கு மாகாண சபையின் முன்னாலும் அதன் பின்னர் விக்னேஸ்வரனின் வீட்டிலும் திரண்ட ஐநூறுக்கும் அதிகமான இளைஞர்களின் ஒருங்கிணைவென்பது யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் அரங்கில் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. ஒரு ஜனவசியம் மிக்க அரசியல் தலைமையின் பேரில் ‘தமிழ்த்தேசியம்’ என்ற கொள்கையின் பேரில் திரண்டிருக்கும் இந்த சக்தி ஓர் அலையாக மாற்றம் பெறுமா? விக்னேஸ்வரன் இன்னொரு அரசியல் குழுவின் தலைமையாக மாறுவாரா? அவ்வாறு அவர் மாறுவது தமிழ்மக்கள் மத்தியில் விக்னேஸ்வரன் மீதான அபிமானத்தை எவ்விதம் பாதிக்கும்?

முதலமைச்சரின் விசாரணைக்குழு அறிக்கையின் பின்னரான முடிவுகளை நாம் அறிவோம். தமது அமைச்சர்களை பதவிகளை தியாகம் செய்யச் சொல்லியிருக்கிறார். அவர்களும் செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னுதாரணமான நடவடிக்கை. இதை விட அதிகபட்சமான சினிமாத்தனமான முடிவுகளையோ அல்லது பின்னடிப்புக்களையோ அவர் செய்திருந்தால் அது அவரது ஆளுமை ஏற்படுத்தியிருக்கும் விம்பத்திற்கு பொருந்தாத ஒன்று.

நீதியை அறிந்த ஒருவர், அதைக் கறாராகக் கடைப்பிடிப்பவர் என்ற மனப்பிம்பம் அவருக்கு மக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது. இளைஞர்கள் நேர்மையான, அறத்தின் பக்கம் நின்று பேசும் முதல்வரை, தமது கனவாகக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் அவர்களது கனவை ஈடுசெய்யும் தலைமையாக விக்னேஸ்வரன் இருக்கின்றார். அதிகபட்சம் தாம் விரும்பும் உண்மையைப் பேசும் ஒருவராக தமிழ்மக்கள் அவரை மாற்றியிருக்கிறார்கள்.

இந்தப் பின்னனியில் விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லப் பிரேரணையை அதைக் கொண்டு வந்த தரப்புக்கள்  மீள எடுப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றே தோன்றுகிறது. விக்னேஸ்வரனுக்கெதிராகக் கைநீட்டும் எவருக்கும் விக்னேஸ்வரன் அளவுக்கு ஜனவசியமோ கருத்துக்களை வெளிப்படுத்தும் நிதானமோ இல்லை. இந்த நிதானமான முதியவரின் குரலுக்கு ஒரு அலையை வீச வைக்கும் சக்தியிருக்கிறதென்றே அவதானிக்க முடிகிறது.

விக்னேஸ்வரன் இன்னொரு அரசியல் குழுவிற்கு தலைமையேற்கச் செல்வாரா? விக்னேஸ்வரன் தமிழ்மக்கள் பேரவையினூடாக தனது இன்னொரு அரசியல் பிரவேசத்தை நிகழ்த்துவாராயின் ஒப்பீட்டளவில் அது விக்னேஸ்வரனை விட மக்கள் பேரவையில் உள்ள பிற அரசியல் குழுக்களுக்கே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருக்கும். அது விக்னேஸ்வரனின் ஜனவசியத்தை, ஒளியை தங்கள் தரப்புடன் இணைத்துக்கொள்வதன் ஊடாக தமது தரப்பை வலிமைப்படுத்திக்கொள்ளவே உதவும்.

ஆனால் அதனைப் பயன்படுத்தி பொருட்படுத்தக் கூடிய மாற்றங்களை இவர்கள் ஏற்படுத்துவார்களா?  அல்லது இன்னொரு தெரிவாக மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக மாறுவாராயிருந்தால் இப்பொழுது நிலவும் எதிர்ப்புகளை எவ்விதம் சமாளித்து தனக்கு வாக்களித்த மக்களுக்கு நியாயமாக நடந்துகொள்ளப் போகிறார்? அதற்கான வாய்ப்பிருக்கிறதா?

விக்னேஸ்வரன் எடுக்கப்போகும் தேர்வு சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியில் நிச்சயம் மாறுபட்ட அபிப்பிராயங்கள் ஏற்படவேசெய்யும்.  ஆனாலும் அது அது எவ்விதத்திலும் அவரது அரசியல் மதிப்பை மாற்றப் போவதில்லை. அரசியலில் தந்திரம் முக்கியமானதென்றாலும் மக்கள் தந்திரத்தை விட அறத்தின் பக்கமே நிற்பார்கள். அதுவே மக்களின் அளவுகோலாக இருக்கும். அந்தளவுக்கு விக்னேஸ்வரன் மக்கள்மயப்பட்டிருக்கிறார்.

இதனோடு இணைத்து விக்னேஸ்வரனின் நிர்வாகத்திறமைகள் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் நாம் பொருட்படுத்த வேண்டும். அது விக்னேஸ்வரனை தலைமையாகக் கொண்டாடும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ‘நல்லவர்’ என்ற பண்பு மட்டும் ஒரு அரசியல் தலைமைக்குப் போதாது. தமிழ் மக்களின் இழப்பென்பது பெரியது. இவ்வளவு பெரிய இழப்புகளை சந்தித்த ஒரு மக்கள் தொகுதிக்குத் தலைமை தாங்கும் ஒருவர் மக்களுடன் நெருக்கமானவராக மட்டும் இருப்பது போதாது, பல்வேறு பண்புகளுடன் இருக்கும் அரசியல் தரப்புக்களுடன் பேரங்களைச் செய்பவராகவும் அரசியல் விவகாரங்களை கையாளக் கூடியவராகவும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.

தமது இரு அமைச்சர்கள் தொடர்பில் விக்னேஸ்வரன் எடுத்திருக்கும் முடிவென்பது மக்கள் மத்தியில் அவருக்கு அபிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அவரளவில், அவரது மதிப்பீட்டின் அடிப்படையில் அந்த அமைச்சர்களின் அரசியல் இருப்பென்பது மனதளவில் அவருக்கு வலிமையைக் கொடுப்பதாகவே இருந்தது.   இந்த நெருக்கடியான நிலையில் முதலமைச்சரின் பக்கத்திலேயே அதிகளவு நியாயம் இருப்பதாகப்படுகிறது. அவரின் பக்கமே நாம் குரல் கொடுக்கவேண்டும், அதேவேளை அவரது குரலை செயலுக்குப்போகும் ஒன்றாக மாற்றவேண்டும். வெறுமனே உரையாற்றும் ஒருவராகவே அவர் தனது காலத்தைக் கழித்துவிட நாம் அனுமதிக்கமுடியாது. ஆனால் அரசியல் விருப்பு மிக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டிய காலம்.

தமிழ் மக்களுக்கு ஜனநாயக அரசியலென்பது  நீண்ட இடைவெளிக்குப் பின் நடைமுறையிலிருப்பது, அதன் ஜனநாயகப் பண்புகளை பயிற்சி செய்வதற்கு சிறிது காலமெடுக்கும், இந்தக் காலத்தில் நிகழக் கூடிய மாற்றங்கள் என்பன கூடிய பட்ஷம் ஜனநாயக முறைப்பட்டதாகவும்  அரசியலை தேர்தலைத் தாண்டி விளங்கிக் கொள்ள வேண்டிய பங்கேற்க கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும். இந்த ஏழு வருடங்களில் அதிக பட்ஷம் உணர்வெழுச்சியான விடயங்களுக்காகவே இளைஞர்களும் மக்களும் தெருவிலிறங்கியிருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் விளைவுகளில் அந்த வகையான போராட்டங்களே முதலில் தோன்றும். ஆனால்  அது வளர்ச்சிப்போக்கைக் கொண்டிருக்க வேண்டும். உணர்வெழுச்சியிலிருந்து அரசியலை ஒரு அறிவுபூர்வமான துறையாகக் கையாளப் பழக வேண்டும்.

இப்பொழுது இரண்டு கட்டுரைகளிலும் நாம் விவாதித்த ஆளுமைகளின் தன்மைகளில் போதாமை உள்ளது. விமர்சனங்கள் உண்டு. ஆனால் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நாம் இந்தப் பக்கத்தில் நிற்க வேண்டுமென்று தீர்மானம் செய்ய வேண்டும். மேலும் இங்குள்ள சிவில் சமூகங்களும் கல்வி நிலையங்களும் சுய சார்புள்ள பிரச்சினைகளோடு பொது அரசியலில் உள்ள விடயங்களை உள்வாங்கி மக்களை அரசியல் அறிவுள்ள தொகுதியாக மாற்ற வேண்டும்.

அரசியல் உணர்வுள்ள தொகுப்பாக இருக்கின்ற தமிழ்மக்களை அரசியல் அறிவுள்ள தொகுதியாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் இளைஞர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு புத்திஜீவிகளுக்கும் உள்ள பொறுப்பு. அரசியலை ஒரு மக்கள் தொகுதியின் அறிவாக மாற்றுவதற்கு பெரும் உழைப்புத் தேவை. பரந்துபட்ட வாசிப்புள்ள ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற வேண்டும். அன்றாட பத்திரிக்கைச் செய்திகளை வைத்து கணிக்கும் அரசியலைத்  தாண்டி அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியலிலும் சமூகத்திலும் அக்கறையுள்ளவர்கள் இனியும் அரசியலை ஓட்டுப்போடுவதுடன் மாத்திரம் நகர்ந்து செல்லும் ஒரு சடங்காக தொடர முடியாது. குறிப்பாக இது தமிழ் இளைஞர்கள் அரசியல் பழகவேண்டிய காலம்.

– கிரிஷாந்

(பாகம் 01 – கழுதைப்புலி அரசியல்)

0 Shares