கூழாமுறிப்பை தாரைவார்க்க துடிக்கும் முல்லை அரச அதிபர்! [Special Report]

17850

கூழாமுறிப்பில் 177 ஏக்கர் காணியை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக செயற்படுகின்றார் முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி. 2016.07.08 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற DTC (District Technical Committee) கூட்டத்தில் குறித்த மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைக்காக காடழிப்பு செய்ய வேண்டிய பகுதிகள் குறித்து ஆராயப்பட்டது. அதில் சில பகுதிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பல இடங்களுக்கு அனுமதியளிக்கப்படாமல், கிடப்பில் விடப்பட்டது. அந்த வகையில் புதுக்குடியிப்பின் கிழக்கு பகுதியில் உள்ள மல்லிகைத்தீவு எனும் காட்டுப் பகுதியில் 250 ஏக்கர்கள் தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்துக்காக அழிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

அதேவேளை முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் காடுகளை அழிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன்பின்னர் DTC (District Technical Committee) யின் அனுமதியின்றியே கூழாமுறிப்புக் காடுகளை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்றும் முயற்சிகள் தொடர்ந்தன. கடந்த வாரம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இவ்விடயத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அதனைக் கண்டித்து அண்மையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகப் போராடி தம் எதிர்ப்பை வெளியிட்டும் இருந்தனர். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், ஏற்கனவே மல்லிகைத்தீவில் 250 ஏக்கர் காடுகளை அழிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி தவறுதலாக இடம்பெற்று விட்டது எனவும், அதனை கூழாமுறிப்பில் காடழிப்பதற்குரிய அனுமதியாக மாற்றித் தருமாறு கோரியும் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியிருக்கின்றார்.