முன்னாள் போராளிகளின் பெயரால்! – தீபச்செல்வன்

569
அண்மைய நாட்களில் வடக்கில் சில வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த சம்பவங்களுக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் கதைகள் உருவாக்கப்பட்டன. யாழ் பொலிஸ்தரப்பு குறித்த சம்பவங்கள், முன்னாள் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்படுவதாக குற்றம் சுமத்தினர். வரலாறு முழுவதும் வன்முறைகளும் ஆயுதங்களும் தமிழர் தலையில் திணிக்கப்படுவதுபோலவே இந்தக் கட்டுக்கதைகளும் தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்டன.
தமிழ் மக்களின் தாயகத்திற்காக, அந்தக் தாயகத்தை ஆளும் சுய உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போரிட்டவர்கள் விடுதலைப் புலிப் போராளிகள். 2009 மே மாதத்துடன் தமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. சமூக சீர்நிலை, ஒழுக்கம் என்பவற்றை தமிழர் வாழ்வில் கட்டி எழுப்புவதில் முன்னின்ற விடுதலைப் புலிகள் இயக்கம் சமூக வன்முறைகளுக்கு எதிரான போக்கைக் கொண்டிருந்ததுடன் தமது ஆட்சிக் காலத்தில் அந்த அமைதியை சாத்தியப்படுத்தியும் காட்டியிருந்தனர்.
விடுதலைப் புலிகள் காலத்திற்குப் பின்னரே தமிழர் நிலத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துப்படப்பட்டன. 2009இற்கு முன்னர் இராணுவத்தினராலும் இராணுவத்துடன் இணைந்து இயங்கிய துணைக் குழுக்களாலும் தமிழர் தாயகத்தில் இளைஞர்கள், ஊடவியலாளர்கள், எழுத்தாளர்கள் கொன்று அழிக்கப்பட்டனர்.  2010ஆம் ஆண்டில் – மகிந்த ராஜபக்ச காலத்தில் மீண்டும் இனந்தெரியாத மர்ம நபர்கள் என்ற பெயரில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அச்ச நிலை ஏற்படுத்தப்பட்டது.
அதைப்போலவே 2011இல் கிறீஸ் பூதம் என்ற பெயரில் அப்போதைய ஆட்சியாளர்களால் வன்முறைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மக்கள் அச்சத்தில் தள்ளப்பட்டனர். தமிழ் மக்களை அச்சப்படுத்தவும், தமிழ் மக்களின் உரிமையை மறுப்பதற்கும், தமிழ் மக்களுக்கு நீதியை மறுப்பதற்கும் வன்முறைக் குழுக்களை ஏற்படுத்தி வன்முறைகளை நிகழ்த்தி அரசியல் நகர்வுகளை இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவ்வாறுதான் தற்போதும் வன்முறைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட வன்முறைக் குழுக்கள் மகிந்த ராஜபச்ச காலத்திலிருந்து சுதந்திரமாகச் செயற்பட்டு வருகின்றன. வடக்கில் அமைதியில்லை! மீண்டும் புலிகள்! மீண்டும் ஆயுதப் போராட்டம் என்ற தோற்றப்பாடுகளை உருவாக்கி தமிழர் நிலத்தில் இராணுவத்தினரை நிலை நிறுத்தவும் சர்வதேசத்தின் பார்வையை தமக்குச் சார்பாக ஈர்க்கவுமே இவ்வாறு திட்டமிட்ட கட்டுக்கதைகள் உருவாக்கப்படுகின்றன.
இதற்காக, சமீபத்திய காலத்தில் முன்னாள் போராளிகளை இழுக்கும் செயல்கள் அரங்கேறுகின்றன. புனர்வாழ்வு என்ற வதைமுகாமைவிட்டு வெளியில் வந்த பல முன்னாள் போராளிகள் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, மாரடைப்பு முதலிய நோய்களினாலும் மர்மமாகவும் இறக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளி வருகின்றன. வாழ்வாதாரமின்றி தற்கொலை செய்யும் முன்னாள்  போராளிகள் பற்றிய அதிர்ச்சிகரமான செய்திகளும் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு இடர்பாடுகளின் மத்தியில் தமது தனிப்பட்ட வாழ்வை கொண்டு செல்ல, முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்வியல் நெருக்கடிகள் சொல்லி மாளாதவை.
இவ்வாறு வாழ்வுக்காக போராடும் முன்னாள் போராளிகளை வன்முறையுடன் இணைத்து, முன்னாள் போராளிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வது மிகவும் அநாகரிமானதும் ஆபத்தான செயலுமாகும். தமது உடலில் விச ஊசி ஏற்றப்பட்டிருப்பதாகவும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் முன்னாள் போராளி ஒருவர் இலங்கை அரசின் நல்லிணக்க செயலணியின் கருத்தறியும் அமர்வின் முன்பாக சாட்சியம் அளித்திருந்தார். இத்தகைய அச்சங்களும் போராளிகளின் மர்ம மரணங்களும் அவர்களது வாழ்வில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
இத்தகைய நிலையில் அரசாங்கமும் சில தரப்புக்களும் தமது அரசியல் நகர்வுக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்துவது தமிழ் மக்களை மேலும் மேலும் அழித்தொழிக்கும் செயலாகும். இந்தக் கட்டுக்கதைகளின் பின்னர், வடக்கில் மீண்டும் புலிகள் உருவெடுத்துவிட்டனர் என்றும் புலிகள் உருவெடுப்பதற்கான ஆர்பமே இந்த வன்முறைகள் என்றும் கூறி, மகிந்த ராஜபக்ச தானும் முன்னாள் போராளிகளை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். இதனையடுத்து அரசு முன்னாள் போராளிகளுக்கும் வடக்கில் இடம்பெற்ற வன்முறைகளுக்கும் தொடர்பில்லை என்று கூறியது.
புனர்வாழ்வளித்த 12190 முன்னாள் போராளிகள் எந்தவொரு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபடவில்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கூறினார். வடக்கின் அண்மைய சம்பவங்களுக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் எந்த நேரடித் தொடர்புகளும் கிடையாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க குறிப்பிட்டார். முன்னாள் போராளிகள்தான் வன்முறைக்கு காரணம் என்று பொலிஸ் தரப்பு முதலிலில் சொல்லியதும் அதனை மகிந்த உபயோகப்படுத்தியதும் அரசு அதனை மறுத்தமையும் தெற்கின் அரசியல் இருப்புக்காகவே என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கம் மிக்க   இயக்கம் என்ற நற்பெயரை பெற்றுக்கொண்டது. புலிகள் இயக்கத்தில் இருந்த உறுப்பினர்கள் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையும் இலட்சியத்தையும் உறுதியகாக் கொண்டவர்கள். இன்றும் இலட்சியபூர்வான வாழ்வை வாழ்ந்துகொண்டு, பல்வேறு வகையிலும் சமூகத்தில் தம்மை இணைத்து நம்பிக்கையை விதைத்து வாழ்வை கட்டியெழுப்புவர்கள்மீது இத்தகைய கட்டுக் கதைகளை ஏற்படுத்தி அரசியல் செய்வது தமிழச் சமூகத்தால் ஏற்க முடியாதது. உயிருடன் உள்ள போராளிகளை மதிப்பதும் அவர்களின் வாழ்விற்கு அரணாக இருப்பதுமே மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். போராளிகள் எமது மக்களுக்கு அரணாக இருந்தவர்கள். எமக்காக போராடிய போராளிகளுக்காக இன்றைய நெருக்கடிக் காலத்தில் அரணாக இருப்பதே நமது சமூகத்தின், நமது தலைமைகளின் போராட்ட ஒழுக்கமாக இருக்க வேண்டும்.