கிளிநொச்சி நகரிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்குள், மருதநகர் பொன்னம்மா கமத்தில் உள்ள ஆனந்தசுதாகரின் வீடு இப்போது மிக அமைதியாக காணப்படுகிறது. பரந்த வயல்வெளிகளின் நடுவே உள்ள சிறிய மேட்டுநிலத்தில் உள்ள அந்த வீட்டில் கனிரதனும், சங்கீதாவும் ஆளுக்கொரு பிளாஸ்ரிக் கதிரைகளில் ஒவ்வொரு தென்னைகளுக்கு கீழ் யோசித்தப்படி அமர்ந்திருக்கின்றார்கள். நான் நினைக்கிறேன், அவர்கள் தமது தந்தையின் வரவை பற்றிய எண்ணங்களோடுதான் இருக்க வேண்டும் என்று. அவர்களின் முகங்கள் வாடிய பயிர் போன்றே காணப்பட்டது. சிரித்தப்படியே எப்படி இருக்கின்றீர்கள்? எனக் கேட்டேன். கனிதரன் பதிலுக்கு ஒரு சின்ன சிரிப்பு – சங்கீதா ஏக்கத்தோடு என் முகத்தை பார்த்தாள்.

கடந்த 15 ஆம் திகதி இந்த வீட்டில் முதன் முதலாக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். புதிய வீட்டுக்கு முதன் முதலாக அந்தக் குடும்பத்தின் தலைவனான ஆனந்தசுதாகரனும் வருகின்றார். மூன்று மணித்தியாலயங்கள் இருப்பதற்கு மட்டும். மூன்று மணித்தியாலயத்தில் யோகராணி சுடுகாட்டுக்கு செல்ல – ஆனந்தசுதாகரன் மகசீன் சிறைக்கு செல்ல – வந்தவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல, நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் சிலரும் எட்டாம் நாள் வரைக்கும் இருந்துவிட்டு அவர்களும் சென்றுவிடவே, தற்போது அந்த வீடு ஏக்கங்கள் நிறைந்த இரு பிஞ்சுகளுடன் அமைதியாக இருக்கின்றது.

நான், கனிதரனுக்கு அருகில் அமர்ந்துகொண்டபோது தானிருந்த கதிரையுடன் வந்தமர்ந்துகொண்டாள் சங்கீதா. “பள்ளிக்கூடம் போனீங்களா?“ என்றேன் “ம்..”. என்றவன், “ஜனாதிபதி மாமாவையும் போய் சந்தித்தம். அப்பாவை விடுவதாக சொன்னார்” என்றான். அருகில் இருந்த சங்கீதா, “அப்பா வருவார்தானே மாமா?” என்றாள். ‘பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்று அந்த பிஞ்சு மனங்களை நோகடிப்பதா அல்லது ‘வருவார்’ என்று அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவதா? எவ்வாறு பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சில வினாடிகள் அமைதி நிலவியது. மீண்டும் பன்னிரண்டு வயதான கனிரதன், “தங்கச்சிதான் அப்பா எப்ப வருவாரா? வருவாரா? என்றுக் கேட்டுக்கொண்டே இருக்கின்றாள்” என்றான். இந்தப் பிஞ்சுகளுக்கு ஒரு புறம் அம்மாவைப் பிரிந்த வேதனை. மறுபுறம் அப்பாவோடு சேர்ந்து வாழ் வேண்டும் என்ற ஏக்கம்.

கனிரதனும், சங்கீதாவும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றார்கள். கனிரதன் தான் ஒரு சொப்ட்வெயார் இன்ஜினியராக வரவேண்டும் என்பதே தனது ஆசை என்றான். சங்கீதாவுக்கு தான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்கிறாள். அவர்களால் இது சாத்தியப்படக்கூடியதே. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தாயில்லாத நிலையில் தந்தையின் அரவணைப்பும், அன்பும், வழிகாட்டலும் கிடைத்தால் நிச்சயம் அவர்களால் தம் இலக்குகளை அடையமுடியும்.

அந்தக் குழந்தைகளின் இந்த நிலைமைகளுக்கு யாரை நோவது? இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைசாலைகளில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் எல்லோரும் வெறும் அம்புகளே. 2009 இற்கு பின்னர் தங்களின் பேரம் பேசும் சக்தி என்று தமிழ் மக்களால் பெருமளவுக்கு நம்பி தெரிவுசெய்யப்பட்டவர்கள், தங்களின் நலன்களுக்காகப் பேரம் பேசுகின்றார்களே தவிர ஆனந்தசுதாகரன்கள், யோகராணிகள்இ கனிதரன்கள், சங்கீதாக்களின் நிலைமைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு பேரம் பேசுகின்றவர்களாக- செயற்படுகின்றவர்களாக இல்லை என்பது மிகமிக வேதனையான விடயம்.

இந்த அரசியல் இது ஒரு புறமிருக்க,

தன் ‘அவர்’ சிறையில் இருந்து வந்தவுடன் பிள்ளைகளுடனும் கணவருனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக கிடைத்த வீட்டுத்திட்டதை, மேசனுடன் இணைந்து கூலியாளாகக் கட்டிய யோகராணி, தனது ஆசை நிறைவேற முன்னரே இவ்வுலகை விட்டு சென்றுவிட்டார். இப்பொழுது அந்த வீடு வெறுமையாக இருக்கிறது.

அம்மா இல்லை, அப்பா இருந்தும் இல்லை, என்ற நிலையில் இரு பிஞ்சுகள், வயோதிப அம்மம்மாவுக்கோ மிகப்பெரும் ஏக்கம். என்னவென்றால், நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில் தானும் தனது மகள் போன்று திடீரென உயிரை விட்டுவிட்டால் இந்த இரண்டு பிள்கைளின் நிலை?!

அவரின் எண்ணமெல்லாம் இப்போது சதா இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பிலேயே சுழல்கிது. தனது மகளை இழந்த கவலையை விட இந்த இரண்டு பிஞ்சுகளின் வாழ்க்கை பற்றிய கவலையே அவரை வாட்டி வதைக்கிறது. அவரின் விருப்பம் தனது மருமகன் வெளியில் வந்து தாயில்லாத பிள்ளைகளுடன் வாழவேண்டும் என்பதே.

‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’ கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும்போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னைத் தம்மோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு போதும், அவர்களை நடுத்தெருவில் விட்டுச் செல்லும் தந்தையொருவரின் மனநிலையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு தலையை குனிந்து கொள்கின்றார் அவர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த பலரின் கண்களையும் கலங்கவைத்தது. தமிழ் மக்களின் குழந்தைகள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்த ஒருவரின் குழந்தைகள் இன்று நிம்மதியின்றி இருப்பதனை பார்க்கின்ற அவலம் மிகக்கொடியது.

2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அரசியல் கைதியாக இருந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு, கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. எனவே சங்கீதா பிறந்தது முதல் தனது தந்தையின் அரவணைப்பை இழந்தார். பத்து வயது வரை தாய் யோகராணியுடன் வாழ்ந்த சங்கீதா, தனது அப்பாவை பற்றி கேட்கும்போதெல்லாம், “அப்பா கொழும்பில் இருகிறார்.. வருவார்.. வருவார்..” என இதுவரை ஆறுதல் சொல்லி வந்த அம்மாவும் இல்லை. எனவேதான் கொழும்பிலிருந்து வந்த அப்பா என்றாலும் தங்களோடு இருக்க வேண்டும் என்பதை சங்கீதா விரும்பினாள். ஆனாலும் பத்து வயதேயான சங்கீதாவுக்கு தனது தந்தையின் நிலைமைகள் புரியவில்லை. ஆயுள் தண்டனையின் விளக்கம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனால்தான் “நீங்களாவது எங்களோடு இருங்கள் அப்பா”, “நாளான்றைக்கு (நாளை மறுதினம்) வருவீங்கள்தானே” என்ற கேள்விகள் எழுகின்றன.

2008 ஆம் ஆண்டு ஆனந்தசுதாகர் கைது செய்யப்படும் போது சங்கீதா தாயின் கருவில் எட்டு மாத சிசு. சங்கீதாவின் அண்ணன் கனிதரனுக்கு இரண்டு வயது. இருவரும் விபரம் தெரிந்த நாள் முதல் தந்தையை சிறைக்குள்ளேயே பார்த்திருக்கின்றனர். தனது குழந்தைகளை ஆறத்தழுவி உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டுப் பாசத்தைப் பரிமாற இடையில் இருந்த கம்பிகள் ஆனந்தசுதாகருக்கு தடையாகவே இருந்து வந்தன. இந்த நாட்டின் ஜனாதிபதியின் பிள்ளைகள் போன்றோ அல்லது எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளின் பிள்கைள் போன்றோ தாங்களும் அப்பாவுடன் செல்லமாக சண்டை பிடிக்க வேண்டும், கடைக்கும் கடற்கரைக்கும் செல்ல வேண்டும், கோயில் திருவிழாவுக்குப் போகவேண்டும், அங்கு அப்பாவுடன் சண்டையிட்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கவேண்டும், அப்பா அம்மா என எல்லோருடன் சேர்ந்து ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாட வேண்டும், பண்டிகை காலத்தில் முற்றத்தில் அப்பாவுடன் வெடி கொளுத்தி விளையாட வேண்டும், அப்பாவின் தோளில் முதுகில் ஏறி சுற்றவேண்டும், அப்பாவின் மடியிலிருந்து சாப்பிட வேண்டும், என்ற எல்லா ஆசைகளையும் அரசியல் கைதி என்ற ஒரு சொல் அப்படியே குழி தோண்டிப் புதைத்துவிட்டது.

பாடசாலைக்கு ஏனைய குழந்தைகள் தங்களது அப்பாக்களுடன் வரும்போது கனிதரனும் சங்கீதாவும் ஒருவித ஏக்கத்தோடு பார்ப்பார்கள் என்றும், அந்தப் பார்வை தாங்களும் இவ்வாறு அப்பாவோடு பாடசாலைக்கு வரவேண்டும் என்பதாகவே இருக்கும் என்றும் சங்கீதாவின் அம்மம்மா சட்டெனச் சொன்னார். இப்படி இந்தக் குழந்தைகளிடம் எண்ணற்ற ஏக்கங்கள்.

முதல் முதலாக தனது குழந்தைகளை ஆறத் தழுவி கட்டியணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் தனது மனைவின் மரணத்தில்தான் இடம்பெறும் என்று ஆனந்தசுதாகர் ஒரு போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. தாயின் இறுதி நிகழ்வில் குழந்தைகள் இருவரும் தாயின் உடலைப் பார்த்த தருணங்களை விட தந்தையின் முகத்தைப் பார்த்த தருணங்களே அதிகம். மரணச் சடங்கு நடந்துகொண்டிருக்கும்போது அடிக்கடி தந்தையுடன் சென்று ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளிடம், தந்தை மீதான ஏக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது.

தாயின் உடல் சுடலையை நோக்கி எடுத்துச் செல்லபட உடலத்துடன் கொள்ளிகுடத்தை தாங்கியவனாக கனிரதன் செல்கின்றான். தந்தையின் சிறைச்சாலை பேரூந்து கொழும்பு மகசீன் நோக்கி செல்லத் தயாரானபோது, அதற்கிடையில் கிடைத்த சிறிது நேரத்தில் ஆனந்தசுதாகர் தனது மகளை அரவணைந்து மடியில் வைத்துக்கொள்கின்றார். முதன் முதலாக அப்பாவின் மடியில் அமர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு, அம்மாவின் மரணத்தில் கிடைக்கிறது. தனது மனைவியின் மரணத்தில் தனது மகளை பத்து வயதில் மடியில் இருத்திக்கொள்கின்றார். அப்பாவின் மடியில் இருந்துகொண்டே அவரின் முகத்தை ஏக்கத்தோடு பார்க்கின்றாள் சங்கீதா. அவளின் பார்வை அப்பாவின் மடியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவே காணப்பட்டது.

அம்மா இல்லா வீட்டில் இருப்பதனை விட அப்பாவுடன் சிறைசாலையில் இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கும் என்று எண்ணியிருப்பாளோ என்னவே. ஆனந்தசுதாகர் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது சங்கீதாவும் அவருடன் பின்தொடர்ந்து அந்த பேரூந்தில் ஏறினாள். இந்தக் காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. தந்தையைப் பிரிய மனமில்லாத அந்தப் பிஞ்சு தாயில்லாத இந்த வெளி உலகத்தை விட தந்தையுடன் சிறைக்குள் தனக்கு மகிழ்ச்சியை தரும் என எண்ணியமை கல் மனதையும் கசிய வைத்த நிகழ்வாகவே காணப்பட்டது. எல்லோரும் கண்கலங்கி நிற்க எதையும் அலட்டிக்கொள்ளாதவளாக சிறைச்சாலை பேரூந்துக்குள் ஏறிவிட்டாள் சங்கீதா. சற்றும் இதனை எதிர்பார்த்திராத காவல் கடமையில் இருந்த பொலீஸாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தங்களை சுதாகரித்துக்கொண்டு சங்கீதாவை சிறைச்சாலை பேரூந்திலிருந்து கட்டாயமாக இறக்கிவிடுகின்றனர்.

சங்கீதா இறக்கப்படுகின்றபோது தந்தையிடம், “அப்பா இனி அம்மாவும் இல்லை, நீங்களாவது எங்களோடு இருங்கள்” எனவும் “நாளான்டைக்கு வருவீங்கள்தானே” எனவும் கேட்கும் அந்த தருணம் வேதனையின் உச்சக்கட்டமாக இருந்தது. ஆனந்தசுதாகரன் மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கி விட்டு தலையை குனிந்துகொள்கின்றார். பேரூந்து புறப்பட்டுச் செல்கின்றபோது சங்கீதா விரக்தியாய் – வெறுமையாய் அந்த தெருவில் நிற்கினறாள்.

இப்பொழுது அந்த இரண்டு குழந்தைகளும் நிர்க்கதியாய் உள்ளனர். வயோதிப அம்மம்மாவுடன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பிக்கிறது. சுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைப்பட்டுள்ளனர். கருணா, பிள்ளையான், கேபி போன்ற பலர் அரசுடனும் வெளியிலும் உள்ளனர்.

ஆனால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பலர் இன்றும் சிறைசாலைகளில் அரசியல் கைதிகளாக வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்களோ சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர். எனவே இந்த அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒரு இறுதி தீர்மானத்திற்கு அரசு வரவேண்டும் அதற்கான அழுதத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும். இல்லை எனில் வருங்காலத்தில் இன்னும் பல சங்கீதாக்களும், பல கனிதரன்களும், பல யோகராணிகளும் உருவாகலாம்.

– மு.தமிழ்ச்செல்வன் –

48 Shares