உலகளாவிய ரீதியில் 73 வீதமான பெண்கள் இணைய ரீதியான பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாவதாக தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி வாலசிங்கம் சங்கீதா தெரிவித்தார்.

சமூகவலைத்தளங்கள் இணையத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் அவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் மீதான வன்முறைகள் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகளவில் நடைபெற்றுவரும் நிலையில் அவற்றில் இருந்து சிறுவர்கள் பெண்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேவை நாடும் மகளிர் அமைப்பு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

பாடசாலைகள், பெண்கள் அமைப்புகள், சிறுவர் அமைப்புகள், பொது அமைப்புகள் மத்தியில் தொடர்ச்சியாக விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் மகளிர் அமைப்பினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியுதவி திட்டத்தின் அனுசரணையுடன் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தேவை நாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி வாலசிங்கம் சங்கீதா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய இணைப்பாளர் சங்கீதா,

இன்று பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள், கையடக்க தொலைபேசிகள் ஊடாக இடம்பெறுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இணையங்கள் ஊடாக அதிகளவில் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று தகவல் தொழில்நுட்பமானது மூலைமுடுக்கெல்லாம் பரவிக் காணப்படுவதன் காரணமாக அது சிறுவர்கள் பெண்களுக்கு ஊறு விளைவிக்கும் நிலையே இருக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் படி இணையத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளினால் 73 வீதமான பெண்கள் உள்ளாவதாக கூறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் சிறுவர்களுக்கு ஆதரவாக செயற்படும் எமது அமைப்புக்கு அதிகளவான முறைப்பாடுகள் இந்த சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களினால் பாதிக்கப்படும் பெண்களினாலேயே செய்யப்படுகின்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி யோகேஸ்வரன், திருகோணமலை பொலிஸ் தலைமையக தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பதிகாரி சி.ஐ.வீரசிங்க, பொலநறுவை பொலிஸ் தலைமையக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பதிகாரி மலிந்த பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

10 Shares