த்தாம் வகுப்பு தோல்வியடைந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், தமிழ் நாட்டின் முதலமைச்சராக வருதல் அத்தனை எளிமையான ஒன்றல்ல. அது அவருடைய தமிழுக்குக் கிடைத்த பரிசு. அவருடைய மொத்த சாதனைக்கும் பின்னால் அவரைத் தாங்கிப் பிடித்திருந்தது அவருடைய தமிழ் ஒன்றுதான். கருணாநிதியைப் புரிந்துகொள்ளுதல், அவருடைய தமிழாற்றலைப் புரிந்துகொள்வதாகவே இருக்கும்.

அவரிடம் இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவைதான் அவரை இரு கரம் பிடித்து முதல்வர் பதவி நோக்கி அழைத்துச் சென்றன.

அவருடைய திரைப்பட வசனங்கள் அன்றைய ஐம்பதுகளில் அறுபதுகளில் அவரை புகழின் உச்சத்தில் நிறுத்தின. சிவாஜிக்கு ‘பராசக்தி’, ‘மனோகரா’ என்றால் எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரிகுமாரி’, ‘மலைக்கள்ளன்’. அன்றைய இரண்டு உச்ச நடத்திரங்களை அடையாளப்படுத்திய தமிழுக்குச் சொந்தக்காரர்.

‘‘ஆகாரத்துக்காக அழுக்கை உண்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்… அதுபோலத்தான் நானும்’’ என கால் மணிநேரம் கோர்ட் வசனம் எழுதி பிரமிக்க வைக்கத் தெரிந்தவர். அது சிவாஜி கணேசனுக்கு.

காதலியை இரவு நேரத்தில் சந்திக்க வருவார் நாயகன். வெகுநேரம் பேசியாயிற்று. ‘‘வரட்டுமா?’’ என்பார்.

காதலி, எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதாக ‘‘எங்கே?’’ என்பார்.

‘‘அருகே’’ என்பார் நாயகன். இது எம்.ஜி.ஆருக்கு.

‘‘ஓடினாள்… ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…’’ சேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் வசனக் காட்சி போல தமிழர்களால் இன்றும் உச்சரிக்கப்படும் மறக்க முடியாத வசன வரிகள்.

குறளோவியம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை எழுதினார். குறளுக்கு உரை எழுதினார். தொல்காப்பியப் பூங்கா எழுதினார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வள்ளுவன் மொழி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கணியன் பூங்குன்றன் எழுதிய சங்க இலக்கிய வரி. இரண்டையும் இணைத்தார்… ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… பிறந்தபின்… யாதும் ஊரே யாவரும் கேளிர்.’’ என்றார் சுருக்கமாக.

சமயோசிதமாக, சுருக்கமாக, வேகமாக பதில் சொல்வது அவருக்கே உரிய திறமை.

வெளிநாட்டில் இருந்து வந்த நிருபர் ஒருவர், ‘‘நீங்கள் என்ன படித்தீர்கள்?’’ என்றார்.

‘‘எம்.ஏ., பி.எஃப்.’’ என்றார்.

‘‘அப்படி ஒரு படிப்பா?’’

‘‘மார்ச் அட்டம்ப்ட்… பட்.. ஃபெயில்’’ என்றார்.

சட்டசபையில் அவருடைய விவாதங்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு உறுப்பினர், ‘‘இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவந்தான் காப்பாற்ற முடியும்’’ என்றார் ஓர் உறுப்பினர்.

‘‘தமிழகத்தை ஏற்கெனவே ஆண்டவன் நான். உறுப்பினர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்’’ என்றார்.

நடிகர் ராதா ரவி, தன் தந்தை நடித்த ரத்தக்கண்ணீர் நாடகத்தை சில ஆண்டுகளுக்கு எடுத்து நடித்தார். நாடகத்தைத் தொடங்கிவைத்துப் பார்த்தார். முடிவிலே பேசினார்.

‘‘ஒப்பனையைப் பார்த்தேன். அதில் உங்கப்பனையே பார்த்தேன்’’ என ராதா ரவியை நோக்கி ஆரம்பித்தபோது அரங்கம் அதிர்ந்தது.

கவியரங்கம்… கண்ணதாசன், சுரதா, வாலி, அப்துல் ரகுமான்… என அவ்வப்போது களைகட்டும்.

ஒரு முறை கணக்கு என்றத் தலைப்பில் ஒரு கவியரங்கம். கழித்தல், பெருக்கல், வகுத்தல், பெருக்கல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பு. கண்ணதாசன் வெகுகாலம் தி.மு.க-வை விட்டுப் பிரிந்திருந்து மீண்டும் வந்து சேர்ந்தார். அவருக்குக் கொடுத்த தலைப்பு கூட்டல்.

‘‘நாட்டை ஆண்டாலும் என்னை அமைச்சர் என்றுதான் சொல்கிறீர்… கண்ணதாசனை கவியரசர் என்கிறீர்’’ என ஆரம்பித்துத் திரும்பி வந்த கவியரசரை அரவணைத்தார்.

கவியரங்கத்தில் தமிழ் விளையாடும். ஒருமுறை கவிஞர் அப்துல் ரகுமான் தாமதமாக வருகிறார். கருணாநிதி தலைமையில் கவியரங்கம் தொடங்கிவிட்டது.

தாமதமாக வந்த கவிஞரை ஜாடையாகக் கிண்டலடித்தார்கருணாநிதி.

அப்துல் ரகுமான் கவிபாட வந்தார்.

‘‘ஏன் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் கருணாநிதியைப் பார்த்து.

சபையே அதிர்ச்சியுடன் கவனித்தது. அடுத்தவரி… ‘‘காத்திருக்கக் கூடாதா?… எம்மையெல்லாம் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் அப்துல் ரகுமான். கருணாநிதி மகிழ்ந்து சிரித்தார்.

‘‘வெற்றி பல பெற்று

விருது பெற நான் வரும்போது

வெகுமானம் எதுவேண்டும்

எனக்கேட்டால்…

அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’ என்றார் கருணாநிதி.

தமிழ்ச் சபைகளில் புரவலரே புலவராக இருந்து தமிழ் வளர்த்த காலம் அது.

எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் இடித்தார். அந்தப் படம் முரசொலியில் வெளியானது.

‘‘பரவாயில்லை தம்பி…

நீ என் முதுகிலே குத்தவில்லை..

நெஞ்சிலேதான் குத்துகிறாய்’’ எனப் பிரசுரித்திருந்தார்.

கதை- வசனம், மேடைப் பேச்சு, கவியரங்கம், சட்டசபை உரை என அனைத்திலுமே கருணாநிதியின் முத்திரை ஆழப் பதிந்திருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் அவருடைய படம் வெளிவராத செய்தித்தாள் இல்லை… அவரில்லாமல் செய்தியில்லை. போற்றலையும் தூற்றலையும் சமமாக பாவிக்கத் தெரிந்த ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார்.

ரோமாபுரி பாண்டியன், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம் போன்ற சரித்திரக் கதைகளையும் வெள்ளிக்கிழமை, ஒரே ரத்தம் போன்ற சமூக கதைகளையும் எழுதினார். சுமார் 80 ஆண்டு பொது வாழ்வில் அவர் எதிர்கொண்ட தலைவர்கள் ஏராளம்…

இந்திரா காந்தி, காமராஜர், மொராஜி தேசாய், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., போன்ற பலருடனும் அரசியல் நடத்தியவர். இத்தனை பெரிய பரப்பில் அரசியல் நிகழ்த்திய தலைவர் இந்தியாவிலேயே யாரும் இல்லை. அது ஒரு சாதனை என்றால் அதனுடன் இத்தனை இலக்கிய நூல்கள், கூட்டங்கள், பத்திரிகை ஆசிரியர் பணி எனச் சுழன்று சூறாவளியாக வந்தவர். இன்று அவருடைய அமைதி, எதிரிகளைக்கூட அசைத்துப் பார்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்நாளெல்லாம் ஓடிக்கொண்டே இருந்த ஒருவரின் அமைதி ஏற்படுத்திய ஆழமான உணர்வு அது.

-vikatan

8 Shares