ஸ்கிட்ஸோஃப்ரினியா எனப்படும் மனச்சிதைவு நோயை ஏற்படுத்துவதில், புகைப்பிடித்தலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைத்தலால் ஏற்படும் மனச்சிதைவு
புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுவும் சிறுவயதிலேயே இந்த பாதிப்பு ஏற்படலாம் எனவும் லண்டன் கிங்ஸ் கல்லுரியைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிகரட் புகையில் உள்ள நிக்கோடின், மூளையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என தமது 61 தனித்தனி ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் லான்சட் சைக்கியாட்ரி என்கிற ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

புகைத்தலுக்கும் மனநல பாதிப்பிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டுவருகிறது.

ஆனால், தங்களுக்குக் கேட்கும் குரல்களிலிருந்தும் மாயத் தோற்றங்களிலிருந்தும் விடுபடுவதற்கு ஒரு வழியாகவே ஸ்கிட்ஸோஃப்ரினியா நோயாளர்கள் புகைபிடித்தலில் ஈடுபடுகிறார்கள் என்று நம்பப்பட்டுவந்தது.

கிங்ஸ் கல்லூரி ஆய்வு:

இந்த ஆய்வில் ஈடுபட்ட கிங்ஸ் கல்லூரியின் குழுவினர், புகைப்பழக்கம் உள்ள 14 ஆயிரத்து 555 பேரிடமும் புகைக்கும் வழக்கம் இல்லாத 2 இலட்சத்து 73 ஆயிரத்து 162 பேரிடமும் எடுக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்தனர்.

அதன்படி, மனநல பாதிப்புள்ள 57 வீதமானவர்கள், மனநோய் தாக்கம் ஏற்படுவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது.

அதேபோல, தினசரி புகைக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, ஸ்கிட்ஸோஃப்ரினியா தாக்கும் வாய்ப்பு இருமடங்கு அதிகமாக இருக்கிறது.

அதாவது, மனச்சிதைவு நோய் தாக்குவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் அந்த நோய்க்கு மருந்தாக புகைபிடித்தலில் ஈடுபடுகிறார்கள் என்று கூற முடியாது என்பது கண்டறியப்பட்டது.

புகைப்பிடிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மனச்சிதைவு நோய் ஏற்படுவதில்லை என்றாலும், புகைப்பிடித்தல் அதற்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்கிறது.

சாதாரணமாக நூற்றில் ஒருவருக்கே இந்த மனநல பாதிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால், புகைப்பதால், நூறில் இரண்டு பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.

சிகரட்டில் உள்ள நிக்கட்டின் மூளையில் உள்ள டோபோமைன் என்ற ரசாயனத்தின் அளவை மாற்றியமைக்கிறது. இது மனநல பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்தில் புகைக்கப்படும் 42 சதவீத சிகரெட்டுகளை மனநல பாதிப்புகள் உடைவர்களே புகைக்கிறார்கள். ஆகவே, புகைத்தலுக்கும் மனநலப் பாதிப்புக்கும் தொடர்பு இருப்பதைக் காட்டும் எந்த புதிய கண்டுபிடிப்பும் கவலையளிக்கக்கூடியதே என உளநல தொண்டு நிறுவனமான ”ரீ திங் மென்டல் இல்னஸ்” தெரிவித்திருக்கிறது.

20 Shares