பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் பிரபலமடைந்தவரான நித்தியானந்தாவை கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக நியமித்தார் தற்போதைய ஆதீனம். நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக நியமித்ததனை ஆட்சேபித்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.

அதனைத்தொடர்ந்து, இந்த நியமனத்தை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேபோல ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதன் காரணமாக மதுரைக்குள் நுழைய முடியாமலிருந்தார் நித்தியானந்தா.

அதே சமயம், மதுரை செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் நித்தியானந்தா. அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.

தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் “மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக நித்தியானந்தா தொடரலாம் என்பது போல தீர்ப்பு வெளியானதாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர். அதில் உண்மை இல்லை. அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவர் குற்றப் பின்னணி கொண்டவர். அவர் மடத்துக்குள் வர உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எக்காலத்திலும் அவர் வர முடியாது. அப்படி வந்தால் கடுமையான நடவடிக்கையை எடுப்போம்” என எச்சரித்துள்ளார்.

20 Shares