துருக்கியில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனதாக கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார் அன்ரூ பிரன்சன் இரண்டு வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

துருக்கியில் சிறைவைக்கப்பட்டு, பின்னர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார் அன்ரூ பிரன்ஸன் தொடர்பான வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

துருக்கியின் அலியாகா நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக துருக்கியில் பணியாற்றிவந்த அன்ரூ பிரன்சன் என்ற பாதிரியார், கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டில் பிரகடனப்படுத்தியிருந்த அவசரகால நிலை, தையீப் எர்டோகன் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அண்மையில் நீக்கப்பட்டது. சிறைவைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அவரை முழுமையாக விடுவித்து நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து வந்தது.

எனினும், பாதிரியார் விடயம் தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளில் எவ்வித தலையீடும் மேற்கொள்ளப்பட மாட்டாதென்றும், நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் உறுதியாக குறிப்பிட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

8 Shares