நியூசிலாந்திலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்த இலங்கை குடும்பம் ஒன்றுக்கு அந்நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

8 வருட போராட்டத்தின் பின்னர் இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக போராடி நியூசிலாந்தில் தொடர்ந்து தங்குவதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றிருந்தது.

2010ஆம் ஆண்டு குறித்த குடும்பம் நியூசிலாந்தின் Queenstown பகுதியில் குடியேறியுள்ளது.

குடும்ப தலைவியான தினேஷா அமரசிங்கவிற்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஆக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ் டவுனுக்கு மாற்றப்பட்டது. அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் அங்கு பணியாற்றி வந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு தினேஷாவிற்கு ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி இருந்த போதிலும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தமையினால் அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டது.

இதன்காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது.

இதனால் அவரது கணவரால் வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் இந்த குடும்பத்தை நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கு ஆதரவாக அந்த நாட்டு மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறானதொரு சூழலிலேயே குறித்த குடும்பத்திற்கு நியூசிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

58 Shares