மர்மமான முறையில் கொல்லப்பட்ட சவுதி நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்ஜியின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுதி அரசுக்கு எதிராக கட்டுரை எழுதி வந்த ஜமால் கசோக்ஜி, ஒரு மாதத்துக்கு முன் துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி துாதரகத்திற்கு சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

முதலில் இவர் காணாமல் போனதாக செய்தி பரவியது. கொலை என்பதை மறுத்து வந்த சவுதி, பின் இதனை ஒத்துக் கொண்டது. கொல்லப்பட்ட கசோகியின் உடல் பற்றி எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து அவரது மகன்களான சலாஹ் மற்றும் அப்துல்லா, முதல்முறையாக வாஷிங்டனில் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளனர்.

இதில், ” எங்கள் தந்தை வீரம் மற்றும் துணிவு மிக்கவர். தந்தையின் உடல் கிடைக்காததால், அவருக்கான இறுதி மரியாதை செலுத்த முடியாத துக்கத்தில் எங்களது குடும்பம் உள்ளது. அவரது உடலை சவுதியின் மதினா நகரில் அடக்கம் செய்வதே எங்களது தற்போதைய விருப்பம்.

இது குறித்து சவுதி அதிகாரிகளிடமும் வலியுறுத்தியுள்ளோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறோம். எமது தந்தை கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டன. அவர் அமைதி வழியில் நடக்கக்கூடியவர். அனைவராலும் விரும்பப்பட்டவர். எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்புகிறோம்” எனவும் அவர்கள் அப்பத்திரிகையிடம் கூறியுள்ளனர்.

இதேவேளை, பத்திரிகையாளர் கசோக்ஜி கொல்லப்பட்டு ஒன்பது நாட்களுக்குப்பின் ஒக்டோபர் 11 ஆம் திகதி, அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் சிக்கிவிடாமல் அதனை முற்றிலும் அழிப்பபதற்காக, கெமிக்கல் மற்றும் நச்சுத் துறை நிபுணர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட சிறப்பு படையை சவுதி துருக்கிக்கு அனுப்பியதாக துருக்கி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவர்கள் விசாரணை அதிகாரிகள் என்ற பெயரில் அனுப்பப்பட்டு, ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை தினமும் துருக்கியிலுள்ள சவுதி துாதரகம் சென்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் இக்குழு மீண்டும் சவுதி திரும்பியதாகவும் துருக்கி பத்திரிகை செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது.

5 Shares