ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சிவில் சமூக அமைப்புகளோடு இணைந்து ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூக அமைப்பு கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பு டிபர்ட்டி சுற்று வட்டாரத்திற்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கொழும்பு ஆங்கல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் போது LGBTQI சமூக அமைப்பு வெளியிட்டிருந்த கூட்டு அறிக்கையில், அண்மையில் இடம்பெற்ற மக்கள் பேரணியின் போது ஜனாதிபதி ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், சமத்துவம், நீதி, கௌரவம் ஆகியவை மகிக்கும் ஒவ்வொரு இலங்கையர்களும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ஓரினச் சேர்க்கையார்கள் குறித்து கருத்து வெளியிட்டமையை கண்டிக்க வேண்டும் எனவும் LGBTQI சமூக அமைப்பு விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்தானது எந்த வகையிலும் பாலியல் ரீதியான பிரிவினரை இலக்கு வைத்து கூறிய கருத்து அல்லவென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் தீர்மானங்களை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான வண்ணாத்திப்பூச்சிகள் கூட்டமே எடுத்ததாக மட்டுமே ஜனாதிபதி கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற மக்கள் பேரணியின் போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஓரினச் சேர்க்கையாளர் என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வண்ணாத்துப்பூச்சி என்ற பதத்தை பயன்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 Shares