ஒருவிநாடி கிடைத்தாலும் அந்த ஒரு நொடிப்பொழுதையும் நான் எமது மக்களின் நலனுக்காகவே நிச்சயம் பயன்படுத்துவேன்.என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா தெரிவித்தார் .

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களில் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

மக்களுடைய பிரதிநிதிகள் என்று கூறப்படுபவர்கள் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களை கடந்த காலங்களில் சரியாகப் பயன்படுத்தவில்லை.

கடந்த மூன்றரை வருடங்களாக முன்னைய அரசு எமது மக்களுக்கான பணிகள் குறித்து ஆற்றலுடனும் அக்கறையுடனும் செய்யவில்லை என மக்களால் குறை கூறப்பட்டது.அக்காலப் பகுதியில் இந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் எந்த வீடு எந்த அமைச்சுக்குக் கொடுப்பது என்பது தொடர்பில் கூட காலம் கடத்தப்பட்டது.

ஆனாலும் இந்த மாதம் இறுதியில் 15 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு எமது அமைச்சினூடாக இயலுமான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.இந்த வீட்டுத்திட்டத்தில் புள்ளிகள் அடிப்படை தொடர்பிலும் பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.இந்த விடயத்திலும் நாம் உரிய கவனம் செலுத்துவோம்.

இருந்தபோதிலும் முறைகேடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எமது அமைச்சினூடாக குறைந்தளவிலான வீடுகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்காக 100 கோடி ரூபா நிதி கிடைத்துள்ளது.இந்தத் தொகை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

வருங் காலகட்டங்களில் இந்த திட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.இழுபறியிலிருந்த இந்த திட்டத்திற்குத் தற்போது ஒரு முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண சபையின் கடந்த 5 வருடகால சேவைகளைப் பார்த்தால் பூச்சியமாகவே இருக்கின்றது.அதிகாரம் இல்லை என்று கூறியவர்கள் எவ்வாறு அதிகார துஸ்பிரயோகம் செய்தார்கள்? நிதி இல்லை என்றார்கள் எவ்வாறு நிதி மோசடி செய்தார்கள்? மக்கள் தெளிவாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வடக்கு மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சிவஞானம் கடந்த 5 வருட காலத்தை வீணடித்துவிட்டோம் என்றும் கூறியிருந்தார் என்பதனை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

அந்தவகையில் எமது அமைச்சின் முக்கிய நோக்கம் என்னவெனில் வறுமையை ஒழித்து எமது மக்களுக்கு ஒளிமயமான ஒரு எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுப்பதேயாகும்.

அத்துடன் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே நாம் இப்பதவியை ஏற்றுள்ளோமே தவிர எமது சுயநலன்களுக்காக ஒருபோதும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளேன்.

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடனான நல்லுறவைப் பயன்படுத்தி அதனூடாக மக்களின் மேம்பாட்டை செய்வதே எமது நோக்கமாகும்.

அத்துடன் சமுர்த்தி உதவித்திட்டம் பெறுவோரின் எண்ணிக்கை போதாத நிலை காணப்படுவதாகவும் அடுத்த வருட முற்பகுதிக்குள் இதை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்கச் செய்வோம்.

அது மாத்திரமன்று இம்மாவட்டத்தில் நந்திக்கடல், வட்டுவாகல் உள்ளிட்ட கடற்பகுதிகளை ஆழமாக்கி அதனூடாகத் தொழில் துறைகளை முன்னெடுப்பதனூடாக

5000 முதல் 10000 வரையிலான மக்கள் பயனடையக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் கூறியதுடன் சிறார்களுடைய போசாக்குத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்திகோழிவளர்ப்பு மற்றும் கால்நடை வளர்பினூடாக நீடித்த நிலையான வாழ்வாதாரத்தைப் பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த இழப்பீட்டுத் தொகையானது உண்மையிலேயே போதுமானதாக இல்லாதுவிட்டாலும் கிடைத்ததை எமது மக்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இத்தொகையை மேலும் அதிகரிப்பதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்தார் .

48 Shares