தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடிகர் விஷால் தலைவராக இருக்கிறார். துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், டைரக்டர் கவுதம்மேனன் உள்ளனர். செயலாளர்களாக எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் உள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் திடீரென பிளவு ஏற்பட்டு உள்ளது. நடிகர் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிராக நடிகர் விஷால் செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக விஷால் செயல்பட்டு தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. இதற்கிடையே தயாரிப்பாளர்கள் சங்க நிதியில் ரூ.7.80 கோடியை நடிகர் விஷால் முறைகேடு செய்துவிட்டார் என்றும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் விஷால் விலக வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகிறார்கள். நேற்று காலை தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், ரித்தீஷ், ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட எதிர்தரப்பினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அமர்ந்து விஷாலுக்கு எதிராக ஆலோசனை நடத்தினார்கள். கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு பூட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க தலைமை அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது. பின்னர் தி.நகர் ராகவைய்யா சாலையில் லோகாம்பாள் தெருவில் இருக்கும் தற்காலிக அலுவலகத்துக்கும் பூட்டு போட்டு மூடப்பட்டது. 

 அதன்பிறகு இரு பூட்டுகளின் சாவிகளையும் தேனாம்பேட்டையில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏ.எல்.அழகப்பன், ரித்தீஸ் ஆகியோர் கூறுகையில், “ஓரு ஆண்டுக்குள் சொன்னதை செய்யாவிட்டால் சங்கத்துக்கு பூட்டு போடுங்கள் என்று விஷால்தான் சொல்லி இருந்தார். அதனால்தான் பூட்டு போட்டு இருக்கிறோம்” என்றனர். மேலும் விஷால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் வெளியிட அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட அனுமதிக்கிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த குற்றச்சாட்டுகளை நடிகர் விஷால் மறுத்தார். தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குகளை பொதுக்குழுவில் தாக்கல் செய்வேன் என்றும் கூறினார். மேலும் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே செல்லப் போவதாகவும் அறிவித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் இருவரும் இன்று காலை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். 

 தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்டுள்ள பூட்டை உடைத்து திறக்கப்போகிறோம். அதற்கு நீங்கள் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அண்ணா சாலை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணி அளவில் அண்ணாசாலை தயாரிப்பாளர் சங்க தலைமை அலுவலகத்துக்கு மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர்கள் வந்தனர். அவர்கள் மூலம் அண்ணா சாலை தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்பிறகு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் தி.நகர் லோகம்பாள் தெருவில் இருக்கும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்கு வந்த நடிகர் விஷால் போலீசாரிடம், “வழிவிடுங்கள். நான் பூட்டை உடைத்து திறந்து உள்ளே செல்ல வேண்டும்” என்று கூறினார். ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை. “மாவட்ட பதிவாளர் வந்து கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் பூட்டை திறந்து விடுகிறோம்” என்று போலீசார் தெரிவித்தனர். இதை விஷாலும் அவர்களுடன் வந்த தயாரிப்பாளர்களும் ஏற்கவில்லை. பூட்டை உடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 

 இதையடுத்து போலீசாருக்கும், நடிகர் விஷால் தலைமையில் வந்த தயாரிப்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விஷால் கூறுகையில், “இது எங்களது அலுவலகம். எங்கள் அலுவலகத்துக்கு செல்ல நாங்கள் யாரிடம் அனுமதி பெற வேண்டும். பதிவாளர் வரும்வரை நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும். காத்திருக்க முடியாது” என்று வாதிட்டார். அதற்கு போலீசார், “பூட்டு போடப்பட்டு இருக்கிறது. அதிகாரி வரட்டும். பொறுமையாக இருங்கள்” என்று தெரிவித்தனர். உடனே விஷால், “சட்ட விரோதமாக போடப்படும் பூட்டுக்கு போலீசாரே எப்படி துணை போகலாம்” என்று தெரிவித்தhர். இதனால் சுமார் 20 நிமிடம் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. இந்த நிலையில் தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் போலீஸ் படையுடன் அங்கு வந்தார். அவர் விஷாலுடன் பேச்சு நடத்தினார். அப்போதும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. துணை கமி‌ஷனர் அரவிந்தன் கூறுகையில், “எதுவாக இருந்தாலும் என் அலுவலகத்துக்கு வாருங்கள் பேசி கொள்ளலாம். தெருவில் இப்படி திரண்டு நின்று பேசுவது தவறு” என்றார். இதை விஷாலும், தயாரிப்பாளர்களும் ஏற்கவில்லை. இதனால் வாக்குவாதம் அதிகரித்தது. இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படாத நிலையில் ஒரு கட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டால் கைது செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் நடிகர் விஷால் ஆவேசம் ஆனார். அவராகவே தாமாகவே முன் சென்று கதவை திறந்து விடுங்கள் என்று சொல்லி போலீஸ் வேனில் ஏறி அமர்ந்தார். அவரை கைது செய்வதாக போலீஸ் அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து தயாரிப்பததளர் சங்க செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், பிரவீண்காந்த், ஜெ.எஸ்.செந்தில், ராமச்சந்திரன், அன்பு, ஆகிய 7 தயாரிப்பாளர்களும் வேனில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் தேவர் கல்யாண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். 

 நடிகர் விஷாலும், 7 தயாரிப்பாளர்களும் வேனில் அழைத்து செல்லப்பட்ட போது அந்த பகுதியில் நின்ற நடிகர் மன்சூர்அலிகான் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். “திருடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறீர்களே” என்று சத்தமிட்ட அவர் சில தரக்குறைவான வார்த்தைகளையும் பேசியதாக தெரிகிறது. இதை கேட்டதும் போலீசார் அவரையும் கைது செய்தனர். அவரை போலீசார் வலுக் கட்டாயமாக தள்ளி சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர். தயாரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “விஷால் அளித்த புகார் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் விஷால் அந்த பூட்டை உடைத்து திறக்க முயற்சி செய்தார். இதனால் விஷாலும், தயாரிப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர்” என்றனர். முன்னதாக போலீசார் கைது செய்ததும் வேனில் அமர்ந்து இருந்த நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஒரு திருட்டு பூட்டுக்கு காவல் காக்கிறார்கள். சம்பந்தமில்லாதவர்கள் பூட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்களை ஏன் இவ்வளவு போலீசார் பாதுகாக்கிறீர்கள். எங்கள் பூட்டு, எங்கள் அலுவலகம், நான் எந்த தப்பும் செய்யவில்லை. அந்த பூட்டை உடைத்து உள்ளே போகணும் என்றேன். முடியாது என்றார்கள். கேள்வி கேட்டதற்கு நாங்கள் அரசு ஊழியர்கள். எங்கள் வேலையை செய்ய விடுங்கள் என்று கைது செய்கிறார்கள். இந்த செயல்பாடுகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. இவ்வாறு விஷால் கூறினார். விஷால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் இது தொடர்பாக கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அதன்பேரில் தயாரிப்பாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் இருவரும் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

27 Shares