மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ள சம்பவம் நாகை மட்டுமில்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர் 2 நாளைக்கு முன்னாடி கல்பாக்கம் பகுதிக்கு வேலையாக சென்றார். அப்போது அங்கே ஒரு கடையில் மாட்டு இறைச்சி சூப் குடித்துள்ளார். சூப் குடிப்பதை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு விட்டார். அதனுடன், “ஆயிரம் தான் சொல்லு.. மாட்டுக்கறி.. மாட்டுக்கறிதான்யா” என்ற வாசகத்தையும் போட்டுவிட்டார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி சொந்த கிராமமான பொரவச்சேரிக்கு வந்துவிட்டார்.

முகம்மது பீஃப் சூப் குடிக்கும் போட்டோவை அவரது பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பார்த்து அதிர்ச்சி ஆனார்கள். இதில் தினேஷ் குமார் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கத்தி, இரும்பு கம்பியுடன் முகம்மது வீட்டிற்குள் அதிரடியாக புகுந்துவிட்டனர்.

வீட்டில் இருந்த முகம்மதுவை கத்தியாலும், இரும்பு கம்பியாலும் ஆவேசமாக சரமாரியாக தாக்கினர். இதில் முகம்மது படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அதை பார்த்து பயந்து போன அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

உயிருக்கு போராடிய முகம்மதுவை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகம்மதுவின் உறவினர்கள் கீழவேளூர் போலீசாரிடம் முறையிட்டனர்.

45 Shares